கொசு மாதிரியில் ஜிகா வைரஸ்.. அலர்ட் ஆன கர்நாடகா!

 
Zika virus

கர்நாடகாவில் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சிக்கபள்ளபூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு எச்சரிக்கைகள் மாநிலம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 68 இடங்களில், பல்வேறு வகைகளிலும் கொசுக்களின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஜிகா வைரஸ் கடந்த ஒரு சில மாதங்களாகவே பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலோடு வந்த 3 பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கும் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Zika virus

ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது. தோலில் தடிப்புகள், காய்ச்சல், வயிற்று உபாதை, தசை, மூட்டுகளில் வலி,  தலைவலி போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். தற்போது வரை இதனைத் தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறப்பு சிகிச்சைகளும் இதுவரை எதுவும் இல்லை.

ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் வந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த கிராமமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Zika Virus

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: ஜிகா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதுவரை கண்டறியப் படவில்லை. கொசுக்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணியர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பிணியருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும் என்று கூறினார்.

From around the web