இளம்பெண் நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. குடும்பத்துடன் காதலன் வெறிச்செயல்.. ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Jharkhand

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை அவரது காதலன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி, ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த 26 வயதான இளம்பெண் ஒருவரும் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அந்த இளைஞரின் பெற்றோருக்கு அவருடைய காதல் பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து தங்களின் மகனை காதலிக்கும் அந்த பெண்ணிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த அவருடைய தந்தை மற்றும் அவரது 2 மனைவிகளும் அந்த இளைஞரை சமாதானப்படுத்தி தங்கள் பக்கம் இழுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணையும் தங்கள் வீட்டிற்கு அழைக்கும்படி கேட்டுள்ளனர்.

Jharkhand

காதலனின் பேச்சை நம்பி அந்த பெண்ணும் கடந்த புதன்கிழமை இரவு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு அவரை சரமாரியாக தாக்கிய அவர்கள், அவரது ஆடைகளையும் வலுக்கட்டாயமாக கிழித்துள்ளனர். பின்னர் கிழித்தெடுக்கப்பட்ட ஆடைகளை வைத்தே அந்த இளம்பெண்ணை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் எப்படியும் இரவுக்குள் அந்த பெண் இறந்துவிடுவார் என்று எண்ணி அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

Police

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிரோடு இருந்துள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காதலன் உட்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். காதலனே நம்ப வைத்து குடும்பத்துடன் சேர்ந்து காதலியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web