திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் விஷம் கொடுத்து கொலை.. வரதட்சணையால் நிகழ்ந்த கொடூரம்!

 
Dowry

உத்தரப்பிரதேசத்தில் திருமணமான 8 மாதத்தில் வரதட்சணைக்காக இளம்பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பீசல்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் பால். இவருக்கும் ஹரிஷ் படேல் என்பவரின் மகள் பிரியங்காவுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பணத்தை வழங்கியுள்ளனர். ஆனால், திருமணமான நாளில் இருந்து காரும், கூடுதல் பணமும் கேட்டு பிரியங்காவை அவரது கணவன், மாமியார் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

poison

இந்த நிலையில், மோகன்பூர் ராம்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரியங்கா அனுமதிக்கப்பட்டதாக அவரது தந்தை ஹரிஷ் படேலுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது பிரியங்காவிற்கு அவரது மாமியார் விஷம் கொடுத்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பிரியங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை ஹரிஷ் படேல் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்தின் போது பிரியங்காவின் சகோதரர் வரதட்சணையாக பணம் வழங்கியும், மேலும் காரும், பணமும் கேட்டு எனது மகளை சித்ரவதை செய்துள்ளனர் என்று புகாரில் கூறப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் கணவர் கிஷன் பால் மற்றும் அவரது மாமனார், மாமியார் மீது பத்ரி செயின்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Police

இதுகுறித்து காவல்துறை அதிகாரி சங்சய் தோமர் கூறுகையில், “குற்றவாளிகளைக் கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார். திருமணமான 8 மாதத்தில் வரதட்சணைக்காக இளம்பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web