இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்த இளைஞன்.. காதலிக்க மறுத்ததால் விபரீதம்

 
karnataka

கர்நாடகாவில் காதலை ஏற்காத இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையதளங்களில் கசிய விட்ட இளைஞர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் நெல்யாஹுடிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மகன் அப்ரித் (21). இவர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அப்ரித்தின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலிக்குமாறு இளம்பெண்ணை அப்ரித் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

video

இந்த நிலையில் வேலைக்காக அப்ரித் 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்தார். அங்கிருந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அப்ரித், தன்னைக் காதலிக்காவிட்டால், உன் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், அவரின் மிரட்டலுக்கு அந்த இளம்பெண் அணியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரித், அந்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் கசிய விட்டார். இந்த விஷயம் தெரிந்ததும், அந்த இளம்பெண் 2023 டிசம்பரில் சித்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டில் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்ரிதை சித்தாப்பூர் போலீசார் மும்பை விமான நிலையத்தில் நேற்று கைது செய்தனர்.

Police

அப்போது கூர்மையான ஆயுதத்தால் கையைக் கிழித்து அப்ரித் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால், அதைத் தடுத்து நிறுத்திய மும்பை மற்றும் சித்தாப்பூர் போலீசார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு வந்தனர். குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார், அப்ரித் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web