பேருந்தில் இருந்து தவறி விழப்போன இளைஞர்.. நொடிப் பொழுதில் காப்பாற்றிய நடத்துனர்! வீடியோ வைரல்

 
Kerala Kerala

கேரளாவில் பேருந்தில் பயணித்த வாலிபரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அரசு பேருந்துகளுக்கு இணையாக ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவ்வப்போது இந்த தனியார் பேருந்துகள் விபத்துகளை ஏற்படுத்தும் போது பொதுமக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தனியார் பேருந்து ஒன்றின் பின்புற கதவு பகுதியில் அருகே அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆகும். பேருந்துக்குள் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 

Kerala

அப்போது இளைஞர் ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துநரின் அருகில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் நின்று கொண்டு வருகிறார். பேருந்தில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தபோதும் அவர் டிக்கெட் வாங்குவதற்காக நின்று இருப்பது அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக பிடி நழுவி அந்த வாலிபர் பின்புற கதவு வழியாக கீழே விழப்போகிறார். அவரது அருகில் நின்றிருந்த நடத்துநர் அந்த பயணியை பார்க்காமலேயே அவரது கையை பிடித்து பத்திரமாக அந்த வாலிபரை பேருந்துக்குள் இழுக்கிறார். இந்த களேபரத்தி கதவு திறந்ததையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் அருகில் இருக்கும் மற்றொருவர் அந்த கதவை சாத்திய பின்னர் மீண்டும் பேருந்து பயணிக்கிறது.


19 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் இணையதளவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பின்னூட்டத்தில் பதிவிட்டு வரும் பலரும், அந்த நடத்துநரை ஸ்பைடர் மேன் என்றும், சூப்பர் மேன் என்றும், மின்னல் முரளி என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web