மருத்துவமனையில் இளம் மருத்துவர் சுட்டுக்கொலை... உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
UP

உத்திர பிரதேசத்தில் குழந்தை நல மருத்துவர் ஒருவர் அவரது மருத்துவமனையில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஜலால்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஓம் சாய் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை டாக்டர் திலக்தாரி படேல் என்பவர் நடத்தி வருகிறார். இவர் இந்த மருத்துவமனையின் இயக்குநராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடி உள்ளனர்.

Gun

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட எழுந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் துடித்த மருத்துவரை அருகில் இருந்து இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். மருத்துவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஜலால்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பணிகளை முடித்த டாக்டர் படேல், தனது அறை அமைந்துள்ள மூன்றாவது மாடிக்கு தூங்கச் சென்றார். அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மருத்துவனைக்குள் ஊடுவிய சிலர், உறக்கத்தில் இருந்த டாக்டர் படேல் மீது துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 3 பேர் உள்ளே நுழைந்ததுடன், டாக்டரை ஆளுக்கொரு தோட்டாவாக குறி வைத்து சுட்டுள்ளனர். அந்த வகையில் 3 குண்டுகள் பாய்ந்ததில் டாக்டர் படேல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

Police

இதனையடுத்து உத்தர பிரதேசத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உபி போலீசார் முயன்று வருகின்றனர். மருத்துவமனையில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், அதற்கு தடையாக இருந்ததால் குழந்தை நல மருத்துவரை சுட்டுக்கொன்றார்களா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக இளம் மருத்துவரின் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web