ஆற்றில் குதிக்க போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பிய இளம் தம்பதி.. ரயில் முன் பாய்ந்த உயிரிழந்த சோகம்!

 
Telangana Telangana

தெலுங்கானாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்த நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறோம் என வீட்டில் கூறி விட்டு இருவரும் நேற்று வெளியே சென்றுள்ளனர். 

ஆனால், அவர்கள் இருவரும் நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பகீராபாத் மற்றும் மிட்டாப்பூர் பகுதிகளுக்கு இடையே செல்ல கூடிய ரயில் முன் பாய்ந்து நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன் கோத்தகிரி காவல் துணை ஆய்வாளர் சந்தீப்புக்கு வீடியோ செய்தி ஒன்றை சைலஜா அனுப்பியிருக்கிறார். அதில், நீண்ட காலத்திற்கு முன் அவர் ஒரு தவறு செய்து விட்டார் எனவும், அதனை அவருடைய கணவர் மன்னித்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

dead-body

ஆனால், அவருடைய குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வந்தனர். இந்த துன்புறுத்தலை எங்களால் வெகுநாட்களாக தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால், கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்ததும், சந்தீப் உடனடியாக நவிபேட்டை காவல் துணை ஆய்வாளர் யாதகிரி கவுடை தொடர்பு கொண்டு உஷார்படுத்தினார். அவர்களுடைய தற்கொலையை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

உடனே, உள்ளூர் போலீசாரும் கோதாவரி ஆற்று பகுதியில் இந்த ஜோடியை தேடியுள்ளனர். ஆனால், அவர்களை கண்டறிய முடியவில்லை. இதன்பின்பு, அவர்களின் மொபைல் போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு தேடினர். அதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த அவர்களுடைய உடல்களை போலீசார் மீட்டனர்.


அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web