யாஷ் பிறந்தநாளில் உயிரை விட்ட 3 ரசிகர்கள்.. பேனர் வைக்க முயன்ற போது விபரீதம்!

 
Karnataka

கர்நாடகாவில் கன்னட நடிகர் யாஷின் பிறந்தநாள் கட்அவுட் வைக்கும் போது மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேஜிஎப் படத்தின் மூலம் ராக்கி பாய் ஆக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் தான் ராக்கிங் ஸ்டார் யாஷ். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், இன்று (ஜனவரி 8) தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில், இவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

KGF

மேலும், கர்நாடகா மாநிலம் முழுவதிலும் உள்ள யாஷின் ரசிகர்கள் பேனர் வைத்து தங்களின் உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சூரனகி கிராமத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் ஒன்றிணைந்து, யாஷின் பிறந்தநாளுக்குப் பேனர் வைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பேனர் மேலே இருந்த மின் கம்பத்தில் பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில், ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20) மற்றும் நவீன் காசி (19) ஆகிய மூன்று இளைஞர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மஞ்சுநாத் ஹரிஜன், தீபகா ஹரிஜன், பிரகாஷ் மகேரி ஆகிய 3 இளைஞர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் அருகில் உள்ள லட்சுமேஷ்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இவர்களுக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

shock

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுது வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஷிரஹட்டி தொகுதி எம்.எல்.ஏ டாக்டர்.சந்துரு லமணி, இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது லட்சுமேஷ்வர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web