தலைமுடியில் உலக சாதனை.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 15 வயது இந்திய சிறுவன்!

 
Sidak

உத்தர பிரதேசத்தில் 4 அடி நீள தலைமுடியை கொண்ட சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார். ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. 

சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கௌரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை. சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

Sidak

இதுகுறித்து வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார்.

இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்து விட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

From around the web