நடைபாதையில் சென்ற பெண்கள்.. தறிகெட்டு ஓடிய கார் மோதி இளம்பெண் பலி.. பகீர் வீடியோ!
கர்நாடகாவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி பெண்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் மன்னகுட்டா- லேடிஹில் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த நடைபாதையில் 5 இளம்பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி நடைபாதையில் சீறிப்பாய்ந்தது.
அந்த நடைபாதையில் நடந்து சென்ற 5 பெண்கள் மீதும் மோதியதுடன், மின்னல் வேகத்தில் ரோட்டில் சீறிப்பாய்ந்தது. இதில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். ஆனாலும் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுவிட்டது. கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பெண்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னா் அவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்களூரு மேற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர் மங்களூரு சூரத்கல் அருகே பாலா பகுதியை சேர்ந்த ரூபஸ்ரீ (வயது 23) என்பதும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.
மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சுவாதி (21), இதன்வி (16), கிருத்திகா (16), யத்திகா (12) என்பதும் தெரியவந்தது. இதில், இதன்வி பி.யூ.சி. 2-ம் ஆண்டும், கிருத்திகா பி.யூ.சி. முதலாம் ஆண்டும், யத்திகா 7-ம் வகுப்பும் படித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த நபரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
#Karnataka #Mangaluru road accident #UPDATE
— Kiran Parashar (@KiranParashar21) October 19, 2023
The police have arrested the accused Kamalesh Baladev. 4 women who were injured have been discharged. 23 year old Roopashri died died on the spot. @IndianExpress pic.twitter.com/4xdS53Qt2S
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கமலேஷ் பலல்தேவ் (57) என்பவர், மங்களூரு மேற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில், கமலேஷ் பலல்தேவ் காரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் கமலேஷ் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதற்கிடையே, நடைபாதையில் நடந்து செல்லும் பெண்கள் மீது கார் மோதியதும், இதில் 5 பெண்களும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
