நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்கள்.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சாந்த் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஷோபா, ஆர்த்தி என்ற 2 பெண்கள் கடந்த 5-ம் தேதி, அங்குள்ள ரோஹ்டா சாலையில் 5 நாய்க்குட்டிகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விலங்குகள் நல அமைப்பு பொதுச் செயலாளர் அன்ஷுமாலி வஷிஷ்ட் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில், சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சில தினங்களுக்கு முன்பு 5 குட்டிகளை ஈன்ற நிலையில், அந்த நாய்க்குட்டிகளின் சத்தத்தால் எரிச்சலடைந்த 2 பெண்கள், அவற்றின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
#WATCH | Meerut, UP: CP City, Ayush Vikram Singh says, "Animal Care Society informed police of the incident where 6-7 days ago, two women of Sant Nagar Colony, burned and killed 5 puppies who were 3 days old. Police have taken cognisance of the matter and the case has been… pic.twitter.com/k24RQ0gMbB
— ANI (@ANI) November 9, 2024
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சோபா மற்றும் ஆர்த்தி ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 325-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.