பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. பைக் டாக்சிகள் ஓட தடை.. அரசு அதிரடி அறிவிப்பு!

 
Bike Taxi

கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டுக்கு முந்தைய பாஜக அரசு இதற்கு அனுமதி வழங்கியது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்டோ டிரைவர்களுக்கு மாநில அரசு உறுதியளித்து இருந்தது. மேலும் பைக் டாக்சி பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rapido

அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசின் போக்குவரத்து துறை, கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட அறிக்கையில், “பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய, ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், பைக் டாக்சிகள் பெரிய அளவில், மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bike Taxi

இதுகுறித்து கர்நாடக தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நடராஜ் சர்மா கூறுகையில், “கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மின்சார பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கியது. ஆனால் வெள்ளை பதிவெண் பலகை கொண்ட இரு சக்கர வாகனங்களும் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்பட்டது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. இதை ரத்து செய்ய கோரி நாங்கள் தீவிரமாக போராடினோம். இந்த நிலையில் பைக் டாக்சியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web