நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் சென்ற இளம்பெண் பலாத்காரம்.. கர்நாடகாவில் கொடூரம்!
கர்நாடகாவில் நள்ளிரவில் தனியாக வந்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று கோரமங்கலாவில் உள்ள பஃப் ஒன்றிற்கு சென்று விட்டு திரும்பிய இளம்பெண், மதுபோதையில் தனது பைக்கை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவரது பைக் விபத்தில் சிக்கியுள்ளது.
இதனால், பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு இளம்பெண், அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றுள்ளார். இளம்பெண் மதுபோதையில் இருப்பதை அறிந்துகொண்ட ஆட்டோ டிரைவர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றுள்ளான். பொம்மனஹள்ளி அருகே ஆட்டோ சென்ற போது, ஆள் இல்லாத இடத்திற்கு ஆட்டோவை ஓட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அரை மயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண், தனது தோழிக்கு செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இளம்பெண் உடனடியாக மீட்கப்பட்டு ஹெப்பகோடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் எமெர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனைக்கு வந்த கூடுதல் ஆணையர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்றார்.
இளம்பெண் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரில் பெண்ணுக்கு பலாத்கர முயற்சி நடைபெற்றுள்ளது என்பது உண்மை. போலீசார் உரிய விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.