பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை.. கள்ளத்தொடர்பை கைவிட்டதால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

 
Kerala

கேரளாவில் கள்ளத்தொடர்பை கைவிட்டதால் பெட்ரோல் ஊற்றி பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவர் கல்லூரியில் படித்து வருகிறார். சரிதாவின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயும், மகளும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சரிதாவுக்கும் பவுடிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக்கான பினு (50) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே சமீபத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பினுவுடனான தொடர்பை சரிதா குறைத்து கொண்டார்.

fire

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் சரிதாவின் வீட்டுக்குச் சென்ற பினு, அவரிடம் மீண்டும் தகராறு செய்து உள்ளார். அப்போது திடீரென, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சரிதாவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பற்றியது. அப்போது எதிர்பாராத விதமாக பினுவின் உடலிலும் தீ பிடித்தது. உடனே அவர் அங்குள்ள கிணற்றில் குதித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேங்கோட்டுகோணம் போலீசார், சரிதாவையும் பினுவையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Police

எனினும் சிகிச்சை பலனின்றி சரிதா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். பினு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சேங்கோட்டுகோணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web