ரூ.2,000 மாற்ற கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா..? ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்!

 
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!ரிசர்வ் வங்கி!

ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.

அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.

2000

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகிறார்கள் அல்லது ரூ.500, ரூ.100 நோட்டுகளாக மாற்றிப் பெறுகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி வரை, பொது புழக்கத்தில் இருந்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன. இது, கடந்த மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் ஆகும். வங்கிகள் தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தின்படி இது தெரியவந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBI

மேலும், தற்போது ரூ.42 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளன. கடந்த மார்ச் 31-ம் தேதி பொது சுழற்சியில் ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்த ரூ.2000 நோட்டுகள், மே 19-ம் தேதி ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்தன. வங்கிகளுக்கு திரும்பிவந்த ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் நோட்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

13 சதவீத நோட்டுகள், பிற மதிப்பு நோட்டுகளுக்கு மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கடைசி நாளான வருகிற செப்டம்பர் 30-ம் தேதியின்போது ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு, இந்த 2 மாதங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

From around the web