தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க என்ன செய்தீர்கள்? கனிமொழி எம்.பி சுளீர் கேள்வி!!
தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்ற உடன் டெல்லி விரைந்த கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் பரபரப்பான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்மொழியில் உள்ள ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வி எழுப்பிய கனிமொழி, அது தொடர்பான நிதி ஒதுக்கீடு குறித்தும் நடைமுறைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
” தமிழ்நாட்டிலிருந்து கிடைத்துள்ள பழமையான கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? அல்லது மேற்கொள்ள முன்மொழிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
ஏற்கனவே இருந்த தேசிய ஓலைச் சுவடிகள் இயக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஞானபாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை கையெழுத்து ஓலைச் சுவடிகள் கையகப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன?
இன்னமும் பல தனிநபர்களிடம் முக்கியமான ஓலைச் சுவடிகள் இருக்கும் நிலையில் அவற்றை கையகப்படுத்த கொள்கை மற்றும் சட்ட தெளிவு இல்லாததால் இன்னமும் அவை தனி நபர்களிடமே இருக்கின்றன. அவர்களின் தயக்கத்தைப் போக்கி அந்த ஓலைச் சுவடிகளை சேகரிக்க அரசு திட்டம் வைத்திருக்கிறதா?
தேசிய ஓலைச்சுவடி இயக்கத்தின் கீழ் குறிப்பாக தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?
இந்த இயக்கத்தின் பிராந்திய மையங்கள் அல்லது டிஜிட்டல் மயமாக்கல் மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார் கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டிற்கு வரும் போது வேட்டி கட்டுவதையும், தமிழ் மொழி பற்றி சிலாகித்துப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடியின் அரசு, இந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்கப் போகிறது என்று விரைவில் தெரியவரும்
