வக்பு வாரிய சட்ட திருத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்! ஆ.ராசா அதிரடி!!

நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்தைத் திருத்தும் மசோதாவில் ஒன்றிய அரசு, சபாநாயகர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகார அமைச்சர் மீது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் விவாதிக்கப்பட்ட இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த எதிர்ப்பு வாதங்களை நீக்கிவிட்டு அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் நீக்கவில்லை என்றும், மக்களவையில் நீக்கியதை சேர்த்துக் கொள்வோம் என்று முரண்பட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
நீக்கப்பட்ட விவரத்தை சபாநாயகரிடம் தெரிவித்த பிறகும், அதை சேர்க்காமலேயே மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். இதை சேர்க்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் போது எங்களுடைய ஆட்சேபங்களை பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கருதும். பெரும்பான்மை பலத்துடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற வகையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டத்திருத்தத்தை நீக்குவோம் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தவறான தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இறையாண்மையை முடக்கிவிட்டது.சிறுபான்மை மக்களை முடக்கும் வகையில் வக்பு வாரிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது காட்டாட்சி நடத்தும் ஒன்றிய பாஜக அரசு. இந்த பிரச்சனையில் தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலினுடன் இந்தியாவில் இருக்கும் அனைத்து இஸ்லாமியத் தலைவர்களும் தொடர்பில் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் கடுமையாகப் போராடி இந்த பிரச்சனையைத் தீர்ப்போம்! என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார் ஆ.ராசா.