மாணவர்களுக்கு எச்சரிக்கை! இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. யூசிஜி அதிர்ச்சி அறிவிப்பு

 
UGC

இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. இங்கு அளிக்கப்படும் சான்றிதழ்கள் தகுதியற்றவை எனவும் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.

college

டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், வணிக பல்கலைக்கழகம் லிமிடெட், தர்யாகஞ்ச் கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்), ஏடிஆர்-மைய ஜூரிடிகல் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், திலாஸ்பேட்டை, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கர்நாடகாவில் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகாக், பெல்காம் உட்பட நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன.

Fake University

எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

From around the web