காவி நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் ரயில்.. என்ன காரணம் தெரியுமா?

 
Vande Bharat

வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல் வந்தே பாரத் ரயில், ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களின் வெளிப்புற வண்ணம் காவி நிறத்துக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காவி நிறத்தில் தயாராகி வரும் வந்தே பாரத் ரயில்களில் ஏறி பார்வையிட்டார்.

Vande Bharat

பின்னர் பேசிய ஒன்றிய அமைச்சர், இந்திய மூவர்ணக்கொடியை உதாரணமாக எடுத்துக்கொண்டு காவி நிறத்தில் இந்த புதிய ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். புதிய பாதுகாப்பு அம்சங்கள், ரயில்வே உள்கட்டமைப்பு, ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புப் பணிகள், ரயில் அட்டவணை மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் ஒன்றிய அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகியுள்ள வந்தே பாரத் ரயில்களில் ஏசி இயந்திரங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, மக்களுக்கு ரயில்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் தள்ளுபடிக் கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உட்பட குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏசி சேர் கார் மற்றும் உயர் பிரிவு சொகுசு வகுப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

இதில் அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் சர்சார்ஜ், ஜி.எஸ்.டி., போன்ற பிற கட்டணங்கள் தனித்தனியாக விதிக்கப்படும். பதிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அல்லது அனைத்து வகுப்புகளிலும் தள்ளுபடி வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web