உத்தரகாண்ட் சுரங்க விபத்து: சிக்கியுள்ள தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியீடு!

 
Uttarakhand

உத்தரகாண்டில் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, கடந்த 12-ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக நீடித்து வருகின்றன. தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அறிந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, சுரங்கத்தின் மூன்று பக்கங்களிலிருந்தும் துளையிடுவது உள்ளிட்ட 5 செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அதன்படி ஒவ்வொரு பணியையும் ஒவ்வொரு குழுவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். பிரதான சுரங்கப்பாதையின் வலது மற்றும் இடது பக்கங்களில் இருந்து கிடைமட்டமாக இரண்டு சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. அதேசமயம், சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக ஒரு துளை போடப்படுகிறது.

Uttarakhand

இது ஒருபுறமிருக்க, இடிபாடுகள் வழியாக இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. எனினும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், 10வது நாளான இன்று, சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல் வீடியோ வெளியாகி உள்ளது. இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் அதிகாரிகள் பேசினர். இது மீட்பு பணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

எண்டோஸ்கோபி கேமராவை அனுப்பி வெற்றிகரமாக வீடியோ எடுத்த நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச உதவும் வகையில், செல்போன்களை அனுப்ப மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் குடும்பத்தினர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை இன்று மீண்டும் தொடர்புகொண்டு மீட்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். உத்தரகாசியில் தற்போது அமைக்கப்படும் சில்க்யாரா - பர்கோட் சுரங்கப்பாதையானது, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனித தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அனைத்து வானிலையிலும் பயணம் செய்யும் வகையில் இந்த பாதை அமைக்கப்படுகிறது.

From around the web