உத்தரகாண்ட் நிலச்சரிவு.. சிக்கி தவித்த 30 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால் திரும்பி வர முடியாமல் அப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் அவர்கள் தங்கியுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்டில் சிக்கிய தகவல் அவர்களின் உறவினர்கள் மூலமாக கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசிய தமிழ்நாடு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்த கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு சென்னை வருகின்றனர்.