கடனைக் கட்ட முடியவில்லை.. அக்காவின் 11 வயது மகளை விற்ற தங்கை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

 
Karnataka

கர்நாடகாவில் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் பெண் ஒருவர், தனது அக்காவின் மகளை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்பூரைச் சேர்ந்தவர் சௌடம்மா. இவருக்கு 11 வயது மகள் உள்ளார். சௌடம்மா வீட்டில் இல்லாத போது அவரது சகோதரி சுஜாதா அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சௌடம்மாவின் மகளை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சௌடம்மா, தனது மகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Sold

இதுகுறித்து தனது சகோதரி சுஜாதாவிடம் கேட்டுள்ளார். ஆனால், தனக்குத் தெரியாது என்று சுஜாதா கூறியுள்ளார். ஆனால், மீண்டும் சௌடம்மா வலியுறுத்தி கேட்ட போது வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் சிறுமியை ஆந்திரா மாநிலம், இந்துப்பூரில் உள்ள ஸ்ரீராமுலு என்பவரிடம் விற்று விட்டதாக கூறினார். அதன் மூலம் தனக்கு 35 ஆயிரம் ரூபாய் கிடைத்தது என்றும் கூறியுள்ளார். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சௌடம்மா சென்றார், அப்போது அவரது 11 வயது மகள் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து கலங்கிப்போன சௌடம்மா, தனது மகளை விட்டு விடுமாறு ஸ்ரீராமுலுவிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அவர் சிறுமியை விட மறுத்து விட்டார். உன் தங்கை வாங்கிய பணத்தைக் கொடுத்து விட்டு குழந்தையை மீட்டுச் செல் என்று அவர் கூறியுள்ளார். இதனால் தொழிலாளர் நலத்துறையினரிடம் சௌடம்மா புகார் அளித்தார்.

Police

இதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறையினர், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று இரவு அங்குச் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இது தொடர்பாக தும்கூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய ஸ்ரீராமுலு, சுஜாதா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web