இரண்டு முறை அறுவை சிகிச்சை.. பெண்ணின் தலையில் 77 ஊசிகள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி!

 
Odisha Odisha

ஒடிசாவில் இளம்பெணின் தலையில் இருந்து மருத்துவர்கள் 77 ஊசிகளை அகற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் போலாங்கிர் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா பெஹரா (19). இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு வாக்கில் இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரேஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

Odisha

அதில் ரேஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரேஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு (விம்சார்) பரிந்துரைக்கப்பட்டார்.

விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரேஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரேஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

இதுகுறித்து விம்சார் மருத்துவமனை இயக்குநர் பாப்ராஹி ரத் கூறுகையில், இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Operation

இது குறித்து ரேஷ்மா டாக்டர்களிடம் கூறுகையில், தாயின் மறைவுக்கு பின் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மந்திரவாதியிடம் சென்றபோது அடுத்தடுத்து அவர் தொடர்ந்து ஊசிகளை எனக்கு ஏற்றிவிட்டார் என கூறினார். இதனை கேட்டு டாக்டர்கள் அதிர்ந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரேஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web