பீரங்கி குண்டு வெடித்து அக்னி வீரர்கள் 2 பேர் பலி.. பயிற்சியின்போது விபரீதம்!

மகாராஷ்டிராவில் பீரங்கி பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக பீரங்கிகுண்டு வெடித்ததில் 2 அக்னி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்தில் இருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பீரங்கிகுண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் (20), சைபத் சித் (21) என்ற இரண்டு அக்னி வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.