2 மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள்.. அரியானாவில் பதற்றம்.. 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

 
Haryana

அரியானாவில் நேற்று இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அங்கு ஊர்வலத்தின் மீது கல்வீசி இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பும் மோதிக் கொள்ள, அங்கு கலவரம் மூண்டது.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீசார் சுட்டனர். அரசு, தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Haryana

இந்த நிலையில், நூ மாவட்டத்தில் உள்ள டவுருவில் உள்ள 2 மசூதிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

மசூதிகளில் ஒன்று விஜய் சௌக் அருகிலும், மற்றொன்று காவல் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. இரண்டு மசூதிகளும் குண்டுவீச்சில் சிறிது சேதம் அடைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படையினர் இரண்டு மசூதிகளுக்கும் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.


அரியானாவில் நடந்த வன்முறையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5-ம் தேதி வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

From around the web