தத்தளிக்கும் டெல்லி.. 41 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை.. யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
Delhi

டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டனர். இந்த பெருமழையால் டெல்லி வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மக்கள், முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றனர். பல இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை முடங்கியது. பலத்த மழையால் பல இடங்களில் வீடு இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்தன. வீடு இடிந்ததாக டெல்லி தீயணைப்புத்துறைக்கு 15 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜாகிரா என்ற இடத்தில், ஒரு தகர கூடாரம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த 2 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Delhi

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 169 மி.மீ. மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 41 ஆண்டுகளில் இதுதான் ஜூலை மாதங்களில் அதிகபட்ச மழை ஆகும்.

கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி பெய்த 266 மி.மீ. மழைதான் எல்லா காலத்திலும் அதிகபட்ச மழை ஆகும். அதன்பிறகு நேற்று பதிவான மழை அளவு, ஜூலை மாதங்களில் 3-வது அதிகபட்ச மழை அளவாகும். வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மட்டும் இன்றி காஷ்மீர், இமாசலபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களில் மழை நீடித்தது. இந்த மழையானது இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துளது. யமுனை நதியில் நேற்று நீர்மட்டம் 203.18 மீட்டராக இருந்தது. நாளை பகல் 1 மணிக்குள், அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டும் என்று மத்திய தண்ணீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Delhi

இதற்கு இடையே, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீரை யமுனை ஆற்றில் ஹரியானா திறந்து விட்டது. ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீரை ஹரியானா திறந்து விட்ட நிலையில், யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக யமுனை நதியில் 352 கன அடி திறந்து விடப்படும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் திறந்து விடும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரியானா தெரிவித்துள்ளது.

யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். யமுனை நதியில் நீர் மட்டத்தை கண்காணிக்கவும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்கவும் 16 கட்டுப்பாட்டு அறைகளை டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.

From around the web