ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து.. 9 பேர் பலி.. தொடரும் சோகம்!

ஆந்திராவில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவிற்கு பேசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமங்கள் நிலவுகிறது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், “விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதல்வர் அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Train Accident between Alamanda and Kantakapalle Stations in Vizianagaram-Kottavalasa Rly section of Waltair Division of ECoR in Howrah-Chennai Main Line. @RailMinIndia
— East Coast Railway (@EastCoastRail) October 29, 2023
Helpline Numbers ...👇👇👇 pic.twitter.com/ahAgX4Kohd
முன்னதாக ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது. ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.