தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்.. பெங்களூருவில் பரபரப்பு!

 
Bengaluru

கர்நாடகாவில் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் உத்யான் விரைவு ரயில், பெங்களூரு ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்றனர். இந்த நிலையில் காலை 7 மணியளவில் ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத் தொடங்கியது.

Bengaluru

அதிகாரிகள் புகை வருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்குள்ளாகவே தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 25 நிமிடத்தில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்த 3-வது நடைமேடை மற்றும் அருகில் உள்ள 4-வது நடைமேடையில் எந்த ரெயில்களும் வர அனுமதிக்கப்படவில்லை.


பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பிறகே தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web