3-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
Toll plaza

இந்தியா முழுவதும் வரும் 3-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம். இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

Toll-booth

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து  சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை (ஜூன் 3) அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.

Toll booth

தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக கல்லகம் - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

From around the web