இன்று பில்கிஸ் பானு... நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம்.. விடுதலை செய்தது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி!

 
bilkis-banu

பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம் என குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்ற குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின், மிகப் பெரிய வன்முறையும் கலவரமும் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல கொடூரங்கள் அரங்கேறின. பெண்கள் பலரும் மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அப்படி குஜராத் கலவரத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம் தான் பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம்.

அகமதாபாத் ரன்திக்பூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தை இதில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் சிறு குழந்தை அடித்தே கொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போதே நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவர்களை சில மாதங்களுக்கு முன்பு, அம்மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இது நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

bilkis-banu

பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக மார்ச் 27-ம் தேதி உச்சநீதிமன்றம், தண்டனைக் குறைப்புக்கான கோப்புகளை சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டது.

மேலும், நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். மேலும், குற்றத்தின் தீவிரத்தை அரசு பரிசீலித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில், “கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இதைச் சராசரியான கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. எப்படி ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாததோ.. அதேபோல படுகொலை சம்பவங்களைச் சாதாரண கொலை சம்பவங்களுடன் ஒப்பிட முடியாது. குற்றம் செய்பவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள். அனைத்து குற்றவாளிகளையும் சமமாகக் கருத முடியாது. 

Supreme Court

இன்று அவர், நாளை யார்? அரசு தனது மனசாட்சியைக் கடைப்பிடித்ததா.. என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இன்று அது பில்கிஸ், ஆனால் நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.. அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். எந்த அடிப்படையில் நிவாரணம் வழங்கினார்கள் என்பதை நீங்கள் காட்டவில்லை என்றால், நாங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்” என்றனர்.

அனைத்து குற்றவாளிகளும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக மார்ச் 27-ம் தேதி விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கைக் கொடூரமான என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கும் போது, அவர்கள் செய்த குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்று குஜராத் அரசிடம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

From around the web