தந்தையின் உயிரைக் காக்க.. தள்ளுவண்டியில் வைத்து 35 கி.மீ மருத்துவமனைக்கு ஓட்டி வந்த சிறுமி!

 
Odisha

ஒடிசாவில் தந்தையை காப்பாற்ற சிறுமி ஒருவர் 35 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள நாதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்புநாத். இவர் தள்ளுவண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு சுஜாதா சேத்தி (14) என்கிற மகள் இருக்கிறார். கடந்த அக்டோபர் 22-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக சிலர் ஷம்புநாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய வசதிகள் இல்லாததால், அவரது மகள் சுஜாதா உடனடியாக தள்ளு வண்டியில் வைத்து அவரை 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாம்நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மேல் சிகிசைக்காக உடனடியாக அவரை பத்ரக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Odisha

ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல பண வசதி இல்லாத நிலையில், செல்போனும் இல்லாததால் தவித்து போன சுஜாதா, தனது தந்தையைக் காப்பாற்ற அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தனது தந்தையை தள்ளு வண்டியிலேயே அழைத்துச் செல்ல அவர் முடிவெடுத்தார்.

அங்கு சென்ற போது, மாவட்ட மருத்துவமனையிலும் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அடுத்த வாரம் வருமாறு ஷம்புநாத்தை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவமனையில் தங்குவதற்கான வாய்ப்பு இல்லாததால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு சுமார் 50 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்ற நிலையில் சுஜாதா கண்ணீருடன் கிளம்பினார்.


காயங்களுடன் ஒருவரை சிறுமி ஒருவர் தள்ளு வண்டியில் அழைத்துச் செல்வதை கண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள், அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த சம்பவங்கள் அனைத்தும் தெரியவந்தது. மருத்துவமனை தரப்பில் பேசி ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக் மற்றும் தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் உடனடியாக சிறுமிக்கு உதவ முன் வந்தனர். இதையடுத்து, பத்ரக் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷம்புநாத்திற்கு ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆகும் செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சிறுமி சுஜாதாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

From around the web