திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா.. அம்மனுக்காக தலையில் தட்டு ஏந்தி வந்த ரோஜா!!

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினார்.
‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானர் ரோஜா. தமிழ்நாட்டில் நடிகையாக அறியப்படும் ரோஜா, ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக இயங்கி வருகிறார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். ஜெகன்மோகன் கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் உள்ளார்.
ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர், கடந்த 2022-ம் ஆண்டு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இவர், ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர்.
இந்த நிலையில் திருப்பதி கங்கை அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவில் நடிகையும் அமைச்சருமான ரோஜா கலந்துக் கொண்டார். ஒரு வார காலம் நடைபெறும் இந்தத் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது. திருவிழாவை முன்னிட்டு திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி துவங்கி பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணி ஆகியோர் இன்று கங்கையம்மன் கோவிலில் வழிபட்டனர். பின்னர் கங்கயம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர்.