புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. கழிவறையில் அதிர்ச்சி சம்பவம்!

 
Puducherry

புதுச்சேரியில் கழிவறையில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்கு சென்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது மகள் காப்பாற்ற சென்று, அவரும் மயங்கி விழுந்தார். 

Dead Body

தனது பாட்டி மற்றும் தாய் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட சிறுமி, அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூதாட்டி செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Puducherry

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் அமைந்திருந்த கழிவுநீர் வடிகாலில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, அந்த வாயு வீட்டின் கழிவறையின் வாயிலாக வெளியேறி 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், விஷ வாயு தாக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web