கேரளாவில் ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை.. பொருளாதார நெருக்கடியால் பரிதாப முடிவு!
கேரளாவில் தாய் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள காஞங்காடு பகுதியில் சூரிய பிரகாஷ் (55) என்பவர் மனைவி கீதா (48) மற்றும் தாய் லீலா (90) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் வாட்ச் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் மகன் அஜய், எர்ணாகுளம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்கள் அங்குள்ள ரயில் நிலையம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சூரிய பிரகாஷ் தனது மகன் அஜய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, “உன் தாயும் பாட்டியும் சென்று விட்டார்கள். நானும் செல்கிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய் உடனடியாக அவரது நண்பர் ஒருவருக்கு அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஹோஸ்துர்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லீலா மற்றும் கீதா ஆகியோர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சமையலறையில் சூரிய பிரகாஷும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூரிய பிரகாஷின் சட்டையில் இருந்து கிடைத்த தற்கொலை கடிதம் ஒன்றில், கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.