தண்டவாளத்தில் 5 இடங்களில் பாறாங்கற்களை வைத்து ரயில்களை கவிழ்க்க பயங்கர சதி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

 
Maharashtra Maharashtra

மகாராஷ்டிராவில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைத்துள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே ரயில்வே வழித்தடத்தில் உள்ள அகுர்டி மற்றும் சின்ச்வாட் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை சந்தீப் பரோவ் என்ற ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சின்ச்வாடி அருகே ரயில்வே தண்ட வாளத்தில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இதே போல அருகருகே 5 இடங்களில் பாறாங்கற்கள் இருந்ததை கவனித்த அவர், இது குறித்து உடனடியாக சின்ச்வாட் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.


அந்த சமயம் நாகர்கோவிலில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தை நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நடுவழியில் ரயிலை நிறுத்தினார்.

சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினார்கள். அதன் பிறகு நாகர்கோவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரயில்வே ஊழியர் தக்க சமயத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கபட்டது.

Vande Bharat

இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. மும்பை - புனே வழித் தடத்தில் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும். இதை கருத்தில் கொண்டு ரயில்களை கவிழ்த்து நாச வேலையில் ஈடுபட சமூக விரோத கும்பல் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையே தண்டவாளத்தில் கற்கள் வைத்து அந்த வழியாக வந்த வந்தேபாரத் ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web