கள்ளக்காதலை தொடர மறுத்த பெண்.. ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரக் காதலன்!
கர்நாடகாவில் கள்ளக்காதலை தொடர மறுத்த பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் அருகே யரடோனா கிராமத்தை சேர்ந்தவர் கிரிஜம்மா (35). இவர் தனது கணவருடன் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வந்தார். கிரிஜம்மாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் நாயக் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கிரிஜம்மா தேவராஜிடம் இருந்து விலக முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் கள்ளத்தொடர்பை தொடரும்படி கிரிஜம்மாவை தேவராஜ் வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் கிரிஜம்மாவும், தேவராஜும் தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தேவராஜுடன் உள்ள கள்ளத்தொடர்பை தொடர கிரிஜம்மா மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சேலையால் கிரிஜம்மாவின் கழுத்தை நெரித்ததுடன், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லிங்கசுகுர் போலீசார், கிரிஜம்மாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட தேவராஜை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.