மனைவிக்கு பேச்சு வர வேண்டும்.. நாக்கை கரகரன்னு அறுத்து காணிக்கை செலுத்திய கணவர்.. மூடநம்பிக்கையால் விபரீதம்!
சத்தீஸ்கரில் வாய் பேச முடியாத மனைவிக்காக நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (33). இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு சென்றார். குளத்தின் கரையில் நின்று மந்திரங்களை உச்சரித்த நிஷாத், திடீரென கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்தார். பின்னர் அதை கரையில் உள்ள கல்லில் வைத்தார்.
அதை தொடர்ந்து, நிஷாத் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கிராமத்தினர், நிஷாத்தின் மனைவி வாய் பேச முடியாதவர் என்றும், அவருக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டி நிஷாத் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் தரப்பில் கூறுகையில், “இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நாக்கை வெட்டிக்கொள்ள, ராஜேஷ்வர் நிஷாத் பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாக நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.