ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் சகோதரரான எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா. இவர், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2,900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் ஜெர்மனி தப்பிச்சென்றார்.
இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேவேளை, ரேவண்ணா ஜெர்மனி தப்பிச்சென்ற நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதேவேளை, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தன் மீது மரியாதை வைத்திருந்தால் உடனே பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதி செய்து சிக்க வைத்துள்ளதாகவும், தன் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, தனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் கூறினார். மேலும் 31-ம் தேதி (இன்று) பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.
BREAKING NEWS 🚨
— Tejas Chauhan AAP (@tejaschauhanAAP) May 31, 2024
Modi's alliance MP Prajwal Revanna arrested by Karnataka Police.
Karnataka Congress Govt delivers justice, tough day for BJP IT cell.#GoBackModi #ByeByeModi #ElectionResults #Kanyakumari #PrajwalRevanna https://t.co/GTb33aFUgg pic.twitter.com/3qmMLAobxN
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா இன்று இந்தியா வந்தார். ஜெர்மனியில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பாலியல் வழக்கில் 34 நாட்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.