ஆபாச வீடியோ விவகாரம்.. கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!

 
Prajwal Revanna Prajwal Revanna

பாலியல் வழக்கில் சிக்கியிருக்கும் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, மிரட்டுவதாகவும் சில பெண்கள் தெரிவித்திருந்ததும் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் சித்தராமையா தலைமையிலான அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

Prajwal Revanna

ஹாசன் நகரில் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பரவி வைரலாகி வருகின்றன.  பிரஜ்வாலின் தந்தை எச்.டி. ரேவண்ணாவை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட்ட, பாஜகவை சேர்ந்த தேவராஜே கவுடா, தன்னுடைய கட்சி தலைமைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், தன்னிடம் பென் டிரைவ் ஒன்று உள்ளது.  அதில், பல வீடியோ காட்சி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.  பல பெண்களை பிற்காலத்தில் மிரட்டுவதற்காக, அந்த வீடியோ பதிவுகளை பிரஜ்வால் படம் பிடித்து வைத்திருக்கிறார் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட கமிட்டி இன்று இறுதி முடிவெடுக்கும் என எச்.டி. குமாரசாமி குறிப்பிட்டார்.  இதனை பெரிதுப்படுத்த அனைத்து வகையான சதி திட்டங்களிலும் காங்கிரஸ் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த சூழலில், பிரஜ்வால் மற்றும் அவருடைய தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக வீட்டு பணிப்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுகிழமை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.  இதுபற்றி 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Kumarasamy

இந்நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் இன்று கூடியது.  இதில், பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என முடிவானது.  இதற்காக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  அவர் எம்.பி.யாக உள்ள நிலையில், டெல்லியில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்.டி. குமாரசாமி முன்பு பேசும்போது கூறினார்.

பிரஜ்வால் தற்போது நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு சென்று விட்டார்.  பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம்.  இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

From around the web