நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

 
Karnataka

கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர், பெலகாவி மாவட்டத்தில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். வேன் மூலம் இவர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஹவேரி மாவட்டம் அருகே இன்று அதிகாலை சென்றுக் கொண்டிருந்த அந்த வேன், தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதியது.

Accident

இந்த விபத்தில் வேனில் பயணித்த 2 சிறுவர்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, படுகாயமடைந்த மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி பரசுராம் (45), பாக்யா (40), நாகேஷ் (50), விசாலாட்சி (50), சுபத்ரா பாய் (65), புண்யா (50), மஞ்சுளா பாய் (57), ஆதர்ஷ் (23, ஓட்டுநர்), மானசா (24), ரூபா (40), மஞ்சுளா (50), 4 வயது குழந்தை (பெயர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை), 6 வயது குழந்தை (பெயர் கண்டுபிடிக்கப்படவில்லை) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web