65 வயதை 25 வயதாக மாற்றும் ‘டைம் மெஷின்’.. முதியவர்களிடம் ஆசை காட்டி ரூ.35 கோடி மோசடி செய்த தம்பதி!

 
uttar pradesh

உத்தர பிரதேசத்தில் சிகிச்சை மூலம் இளமையை மீட்டுக் கொடுப்பதாக கூறி பல முதியவர்களிடம் ரூ.35 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் இணைந்து ‘ரிவைவல் வேர்ல்ட்’ என்ற சிகிச்சை மையத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள் ‘ஆக்சிஜன் தெரபி’ என்று கூறப்படும் ஒரு சிகிச்சையின் மூலம் இரண்டே மாதங்களில் முதியவர்களுக்கு இளமையை மீட்டுக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். 

இந்த சிகிச்சைக்காக அவர்கள் பயன்படுத்திய இயந்திரத்தை டைம் மெஷின் என்று கூறி வந்துள்ளனர். இதனை அவர்கள் நோட்டீஸ் அடித்து விளம்பரமும் செய்ததாக கூறப்படுகிறது. கான்பூரில் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்களுக்கு விரைவாக வயோதிகம் வந்துவிடுகிறது என்றும், தங்களிடம் இருக்கும் டைம் மெஷின் மூலம் 65 வயது நபரை 25 வயது நபர் போல இளமையாக மாற்றிவிட முடியும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். 

Machine

இதனைக் கேட்ட முதியவர்கள் பலர் தங்கள் இளமையை மீட்டுக் கொண்டு வரும் முனைப்பில், இந்த மோசடி தம்பதியின் ஆசை வார்த்தைக்கு மயங்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இந்த தம்பதியினர் 'ஆக்சிஜன் தெரபி' சிகிச்சைக்காக ரூ.6,000 முதல் ரூ.90,000 வரை வெவ்வேறு பேக்கேஜ்களில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ராஜீவ்-ராஷ்மி தம்பதியினர் தன்னிடம் ரூ.7 லட்சம் பணத்தை பறித்து ஏமாற்றியதாக கூறி காவல்துறையில் ரேணு சிங் என்ற பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த தம்பதியினர் சிகிச்சை என்ற பெயரில் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் நூற்றுக்கணக்கான முதியவர்களிடம் ரூ.35 கோடி மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

Police

தற்போது ராஜீவ் - ராஷ்மி தம்பதி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் சிகிச்சை மையத்தில் பயன்படுத்தி வந்த இயந்திரம் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

From around the web