ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமல்.. சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றன.
இந்தியாவில் கடந்த 1860-ம் ஆண்டு தொடங்கி நேற்று வரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் என மூன்று சட்டங்கள் அமலில் இருந்து வந்தன. இப்படி இருக்கையில், இந்த சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என 3 புதிய குற்றவியல் சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.
இது ஜீரோ எஃப்ஐஆர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அம்சங்கள் இருக்கின்றன.
அதேபோல காவல் துறையிடம் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவை புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும் இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
முன்னதாக இந்த சட்டம் குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1860 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல, தண்டனை வழங்குவதாகும். இந்த மூன்று புதிய சட்டமூலங்கள் ஊடாக மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளன. திமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் சுமையைக் குறைக்கும் வகையில் நியாயமான, காலவரையறைக்குட்பட்ட, ஆதார அடிப்படையிலான விரைவான விசாரணைகள் அமலாக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் தடய அறிவியல் அடிப்படையில் வழக்கு விசாரணையை வலுப்படுத்தியுள்ளோம். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஆடியோ-வீடியோ முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளோம். இனி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் அசாம் வரையிலும் நாடு முழுவதும் ஒரே நீதி முறை இருக்கும்” என்று கூறியிருந்தார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படும் நிலையில், 5.65 லட்சம் காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த 3 சட்டங்களும் அமலுக்கு வரும் இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 17,500 காவல் நிலையங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.