குடிப்பதை நிறுத்த கூறிய ஆசிரியை... அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய கணவர்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

 
kerala

கேரளாவில் மனைவியை அடித்துக்கொன்று விட்டு காணாமல் போனதாக கணவர் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியை வட்சமா (27). இவரது கணவர் விஜேஷ். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையான விஜேஷ் அவ்வப்போது மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி வட்சமாவை துன்புறுத்தியுள்ளார். கடுமையான வார்த்தைகளை பேசியும், அவரை தாக்கியும் துன்புறுத்தியுள்ளார்.

இதனிடையே, கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு சென்ற மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று வட்சமாவின் உறவினர்களுடம் விஜேஷ் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வட்சமாவின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் நிலையத்திற்கு விஜேஷூம் சென்று மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜேஷ் நடவடிக்கையில் வட்சமாவின் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. விஜேஷ் வீட்டில் உள்ள ஒரு அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதையடுத்து, வட்சமா காணாமல் போன 3 நாட்களுக்கு பின் விஜேஷின் வீட்டில் பூட்டி இருந்த அறையை வட்சமாவின் உறவினர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

Murder

அங்கு கட்டிலுக்கு அடியில் வட்சமா பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வட்சமாவை கொலை செய்து உடல் போர்வையால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வட்சமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேதபரிசோதனையில் வட்சமாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் வட்சமாவை அவரது கணவர் விஜேஷ் அடித்துக்கொலை செய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

மது பழக்கத்தை கைவிடும்படி விஜேஷிடம் வட்சமா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 18-ம் தேதி கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜேஷ் தனது மனைவி வட்சமாவை அடித்துக்கொலை செய்துவிட்டு அவரை காணவில்லை என்று நாடகமாடியுள்ளார். 

Police

இதையடுத்து, விஜேஷை கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். கேரளா - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விஜேஷ் தலைமறைவானதால் அவரை தேடும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளர். கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக வட்சமா ஓமனில் உள்ள தனது உறவினர் சலோமிக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ்-மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய மெசேஜில் கூறியதாவது, “என்னால் வேறு இடத்தில் வாழ முடியும். நான் என் வீட்டிற்கு போகவேண்டிய அவசியமில்லை. நான் விடுதியில் தங்கிக்கொள்வேன். என்னை வாழவும் விடவில்லை சாகவும் விடவில்லை. இந்த வாழ்க்கை வெறுத்துவிட்டது. யாரும் என்னை கண்டுபிடிக்காத இடத்தில் நான் வாழவேண்டும். என்னைப்பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். இந்த சூழ்நிலையை சந்தித்தவர்களுக்கு தான் இது புரியும். நாம் சகித்துக்கொண்டு சேர்ந்து வாழவேண்டுமென்று வெளியாட்கள் கூறுவார்கள். இதற்கு மேல் எனக்கு வேண்டாம். பெண் வாழ ஆண் தவிர்க்கமுடியாதவர் அல்ல” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மனைவி வட்சமாவை கொலை செய்து உடலை மறைத்து நாடகமாடிவிட்டு தப்பியோடிய விஜேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web