ரயில் உணவை ருசி பார்க்கும் எலி.. வெளியான வீடியோவால் பயணிகள் அதிர்ச்சி!

 
Railway

ரயில் பெட்டியில் உள்ள சமையலறையில் எலிகள் உலாவும் வீடியோ வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இவ்வாறு பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், கோவாவின் மட்கான் பகுதியிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் (பேன்ட்ரி) சமையலறையில் எலிகள் ஓடுவதும், பாத்திரத்திலுள்ள உணவுகளை உண்பதும்போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

Rat

அந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் பயணி, “நான் மும்பையிலிருந்து கோவா நோக்கிச் சென்றபோது, ரயிலில் கேன்டீன் பெட்டியிலிருந்த உணவுப்பொருள்கள், பாத்திரங்கள்மீது ஆறேழு எலிகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தன. அதை உடனே எனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டேன். இது குறித்துப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் மிகவும் மோசமாகப் பேசினார்கள். எனக்குச் சரியாக பதிலளிக்கவில்லை.

இதையடுத்து அருகிலுள்ள ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவர்கள் கேன்டீன் மேலாளரை அழைத்து விசாரித்தனர். ஆனால், அவர்கள் மத்திய ரயில்வே அதிகாரிகளைக் குறை கூறினர். மத்திய ரயில்வே அதிகாரிகள் ரயில் பணிமனையில் நிற்கும்போது, சரியாகப் பராமரிக்கவில்லை என்று குறை கூறினர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


இது குறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள், “ரயிலை குர்லா ரயில்வே யார்டில் நிறுத்தியிருக்கும்போது எலிகள் வண்டியில் ஏறிவிடுகின்றன. ரயில்வே யார்டில் அதிக அளவில் எலித்தொல்லை இருக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியது மத்திய ரயில்வே நிர்வாகம்தான்” என்று கூறிவிட்டனர்.

மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மிக்கேலிடம் இது குறித்துப் பேசியபோது, “சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கும் வீடியோ உண்மையானதுதான். எலி, கரப்பான்பூச்சிகளைக் கட்டுப்படுத்த அடிக்கடி தேவையான மருந்து தெளிக்கப்படுகிறது. ரயில்வே யார்டில் எலி மருந்து வைக்கப்படுகிறது” என்றார். உணவுப்பொருள்கள்மீதும், பாத்திரங்கள்மீதும் எலிகள் விளையாடியதைப் பார்த்த பயணிகள், ரயிலில் உணவு வாங்கிச் சாப்பிடவே பயப்பட ஆரம்பித்திருக்கின்றனர்.

From around the web