சாலையில் இருந்த குழி.. சடலமான தாத்தா உயிருடன் எழுந்த அதிசயம்.. உறவினர்கள் இன்ப அதிர்ச்சி!

 
Haryana

அரியானாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 80 வயது முதியவர் ஒருவர் திடீரென உயிர்பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன் சிங் ப்ரார் (80). முதியவரான இவர் கடந்த சில நாள்களாகவே உடல் நலக்குறைவால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உடல் நிலை மோசமாக நான்கு நாட்கள் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை அவரது இதயத் துடிப்பு நின்று போனாதகவும் தர்ஷன் சிங் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குடும்பத்தார் பெரும் சோகத்துடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, வீட்டில் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பாட்டியாலா மருத்துவமனையில் இருந்து தர்ஷன் சிங்கை வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்துள்ளனர். அப்போது வழியில் தான்த் என்ற கிராமத்தை அடைந்த போது அங்கு குண்டும் குழியுமான மோசமான சாலையில் ஏறி இறங்கி ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.

road

அந்த நேரத்தில் தர்ஷன் சிங்கின் கைகளில் அசைவு ஏற்பட்டுள்ளது. அதை உடனிருந்த அவரது பேரன் பல்வான் கவனித்து வியப்படைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் இதை தெரிவித்து வண்டியை மீண்டும் அருகே உள்ள மருத்துவமனைக்கு திருப்பினார்.

அங்கு மருத்துவர்களிடம் விவரத்தை கூறவே தர்ஷன் சிங் மீண்டும் பரிசோதிக்கப்பட்ட போது அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை கேட்ட அவரது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது நம்பவே முடியாத அதிசயமாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

Ambulance

தற்போது தர்ஷன் சிங் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மார்பு பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் சுவாசிப்பதில் சிரமம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மோசமான சாலைகள் மக்களுக்கு சிரமத்தையும் எரிச்சலையும் தரும் நிலையில், ஒரு குடும்பத்திற்கு அதிசயமாக மகிழ்ச்சியை தேடித்தந்துள்ளது.

From around the web