மும்பையில் பிச்சை எடுத்தே உலக பணக்கார பிச்சைக்காரர் ஆன நபர்.. சொத்து மதிப்பை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!
மகாராஷ்டிராவில் பிச்சை எடுத்தே பாரத் ஜெயின் என்பவர் 7.5 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஜெயின். நாம் தொழில் செய்து அதில் லாபம் ஈட்டி கோடீஸ்வரர்களாக மாறியவர்களை பார்த்திருப்போம். கேள்விபட்டிருப்போம். இந்த பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து அதன் மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேலும், இவர்தான் உலகின் மிகவும் பணக்கார பிச்சைக்காரர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளன.
வெளியான தகவல்களின் படி, பரத் ஜெயின் பிச்சை எடுப்பதன் மூலம் மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். 2020-ம் ஆண்டில் மட்டும் இவரது வருமானம் ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் சராசரியாக இவர் 2 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
பிச்சை எடுப்பதன் மூலம் சம்பாதித்து மும்பையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் 2 பெட்ரூம் பிளாட் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அத்துடன் தானே பகுதியில் இவருக்கு 2 கடைகள் உள்ளதாகவும் அதன் வாடகை மூலம் மட்டும் இவர் மதாம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவர் மும்பை சத்திரபதி சிவாஜி சென்டரல் ரயில் நிலையம் மற்றும் ஆசத் டெர்மினஸ் பகுதியில் தான் வழக்கமாக பிச்சை எடுப்பாராம். இவ்வளவு வருவாய் வந்து கோடீஸ்வரராக இருக்கும் பாரத் ஜெயினை இனி பிச்சை எடுக்க வேண்டாம் என குடும்பத்தார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தன்னால் இந்த தொழிலை விடமுடியாது என பாரத் ஜெயின் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்.