ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் தருவது மட்டுமே தீர்வு.. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி!!

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
“ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே பிரச்சினை.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கைகள் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-தான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் தளங்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய திறன்மிகு தாக்குதல்கள் காரணமாக மட்டுமே போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்தது
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கியின் வான் பாதுகாப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது” என்று ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்