முதியவருக்கு திடீர் மூச்சுத்திணறல்.. நுரையீரலில் இருந்த கரப்பான் பூச்சியால் உறைந்த மருத்துவர்கள்!

 
Kerala

கேரளாவில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது கழுத்து பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பிராணவாயு செலுத்துவதற்காக டியூப் அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.

Cockroach

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது, எவ்வித சிக்கலும் இருப்பதாக மருத்துவர்களுக்கு தெரியவரவில்லை.

ஆனால் தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் இருந்து வந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்த போது, அவரது நுரையீரலுக்குள் சுமார் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி ஒன்று சிக்கி உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

Amirta hospital

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கரப்பான் பூச்சி அகற்றப்பட்டது. தற்போது அந்த நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிராண வாயு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த டியூபின் வழியே இந்த கரப்பான் பூச்சி அவரது நுரையீரலுக்குள் நுழைந்து இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

From around the web