லஞ்ச பணத்தை மென்று விழுங்கிய அதிகாரி.. ஸ்பாட்டிற்கு வந்த டாக்டர்.. அடுத்து நடந்தது என்ன?
மத்தியப் பிரதேசத்தில் வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் கட்னி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திர சிங். இவர், வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நில விவாகரம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பொதுமக்கள் ஒருவரிடம் கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
புகார் அளிக்க வந்த சந்தன் சிங் லோதி, நில விவகார பிரச்சினையை தீர்க்க பட்வாரி தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக ஜபல்பூர் மாவட்ட் லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தன் சிங் லோதியிடம் வழங்கி, பட்வாரி கஜேந்திர சிங்கிற்கு கொடுக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மறைந்து இருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், லஞ்சம் வாங்கும் போது பட்வாரி கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதனிடையே லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்ட பட்வாரி கஜேந்திர சிங் உடனடியாக 4 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்ச பணத்தை விழுங்கி உள்ளார்.
A patwari in Katni, allegedly swallowed money he had accepted as a bribe after noticing a team of the Lokayukta's Special Police Establishment pic.twitter.com/AgsOyDsnGM
— Anurag Dwary (@Anurag_Dwary) July 24, 2023
இதைக் கண்டு அதிர்ந்து போன லோக் ஆயுக்தா அதிகாரிகள் கஜேந்திர சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கஜேந்திர சிங்கின் வாயில் இருந்து லஞ்சப் பணத்தை மருத்துவர்கள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விசாரணையில் இருந்து தப்பிக்க லஞ்சப் பணத்தை வாயில் வைத்து விழுங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.