புதிய வருமான வரிச் சட்டம் தனியுரிமையை மீறுகிறது! காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவருடைய கணக்குகளை அரசு அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம், துன்புறுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் வெளியான அறிக்கையில்,
”மோடி அரசாங்கம் புதிய வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், வருமான வரி அதிகாரிகள் உங்கள் டிஜிட்டல் கணக்கை அணுகும் உரிமையைப் பெறுவார்கள் என்று செய்தி கூறுகிறது. அரசு அதிகாரிக்கு சிறிது சந்தேகம் இருந்தால் போதும் எப்போது வேண்டுமானாலும், உங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், வங்கி கணக்கு, வர்த்தக கணக்குகளை சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதிக்க முடியும்.
இது மிகவும் ஆபத்தானது. மோடி அரசு ஏற்கனவே நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இப்போது, இந்தச் சட்டத்தின் உதவியுடன், அது விரும்பும் எவரையும் துன்புறுத்தி அழிக்க முடியும். இந்தச் சட்டத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த முடியும்.
இது ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். இந்தச் சட்டம் ஜனநாயகத்தின் மதிப்புகள் மீதான தாக்குதல் - இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனியுரிமை உரிமையின் மீதான தாக்குதல்." என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.